Tuesday, December 20, 2011

அன்புள்ள அப்பாவிற்கு...

கருவறையில் நான்கிடந்த
பத்து திங்களும்
நின்னக்கறையில்
உயிர் வளர்ந்தேனே;
நிலம்தவழ்ந்த அந்நாளில்
செவிலித்தாயிடம் என்னைப்
பெற்றபோது பெருமிதம்
கொண்ட பாசமிக்கோனே;
உன்னாண்மை விளம்பும்
மீசையென் கன்னம்
கிழித்திட தேம்பி
அழுத எனக்காய்
மழித்திட்ட வாலிபனே;
பயணங்களில் சோர்வுராமலிருக்க உம்
தோள்களையும் துயிலுறங்கையில்
நெஞ்சமதைப் பஞ்சனையாய்
வார்த்திட்ட வயோதிகனே;
பள்ளிப் பருவமதில்என்
தேவை நிவர்த்தி செய்து
கனிவாய்ப் பேசி என்னிடம்
முத்தம் வாங்கும்
கலையில்நீ வல்லவனே;
உன்னுழைப்பின் வெகுமதியாம்
ஊதியமதனின் பெரும்பகுதியை
எம்முக மலர்ச்சிக்காய்
செலவு செய்திட்ட
செருக்கொழித்த சேவகனே;
தாயவளின் அடியிலிருந்தும்
வசையிலிருந்தும் காத்துக்
கண்டிப்புடன் எந்தவறைச்
சுட்டிக்காட்டி நேர்வழிப்
படுத்தும் ஆசானே;
நன்வாலிபனாய்(நற்பெண்ணாய்) நான் வளர
நன்னெறி உரைத்து
நல்வழி நல்கும்
நேசமிக்க நண்பனே;
பின்னாளில் எம்வாழ்வு
நிம்மதியாய் இருந்திட
உம் இந்நாள் மகிழ்ச்சியை
தியாகம் செய்த தீர்க்கதரிசியே;
உம் வாழ்நாள் அனுபவமதை
எம் நினைவில் படிப்பினையாக
வாழ்ந்திட்ட வித்தகனே;
பின்னாளில்...
எம்மன்பும் அரவணைப்பும்
பிரதிபலனாய் எதிர்பாராமல்
இந்நாளில்...
உம் கடமையைச்
செய்யும் கண்ணியமானவனே;
உம்பிறவிப் பேறதனை
எந்நாளும் நிலைபெறச்
செய்திட எம்முயிருள்ளவரை
வாழ்வேனென உறுதியளிக்கிறேன்
எம் தந்தையே!!!

உன்விழியில் நான்!!!

உன் கருவிழியில்
என் பிம்பம்
காணும் அவ்வேளையில்....


காந்தம் கவர்ந்திழுக்கும்
இரும்புத் துகலாய்
உறைந்து போகிறதென்
நரம்பு மண்டலம்!!
வானம் பிளந்து
புவி தீண்டவரும் வண்ணமில்லா
நீர்க்குமிழி போல்
தாவிக்குதிக்கிறதென் மனம்!!
மகரந்தம் தேடி
படபடவென சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சி போல்
தன் துடிப்பெண்ணிக்கையை
கூட்டுகிறதென் இதயம்!!
கருவண்ண கார்மேகம் தனை
மழைக்கு முந்திவரும்
வானவில் போல்
உருவமில்லா ஓருணர்வு
பெருக்கமதனில் திலைக்கிறதென்
நெஞ்சுக்குழி!!
முட்களின் அரவணைப்பினும்
தன் செவ்விதழ்களால்
மனம் களவாடிய
ரோஜாப்பூ போல்
என் இன்பத்தருணம்
விளம்பும் உன்னிதழ்
ரேகை தீண்ட
துடிக்கிறதென் இதழ்கள்!!
கடல் தாவிவரும்
பால்வண்ண அலையினைப்போல்;
ஓடுடைத்து வந்து
வான்வெளி தொடத்
துடிக்கும் குஞ்சுப்
பறவைகள் போல்;
பிறவிப்பயன் தீர்க்க
தம்மிதழ் விரிக்கும்
மென்னிய பூக்குவியல் போல்;
கட்டவிழுந்து நிலம்
தாவும் கன்றினைப்போல்
என்னுலகம் ஆனந்தத்
தாண்டவம் ஆடுவதேனடி தோழி!!

Thursday, March 24, 2011

வழி விடுங்கள்!!!!


ஆம்புலன்சின் அலறலுகுள்ளே கேட்கிறது-
உயிர் உலரும் சத்தம்!!!

உப்பு


சில நேரம் உப்பு கரிக்கும்
என் அம்மாவின் சமையலின் ரகசியம்
இப்போது புரிகிறது-
கண்ணீரும், வியர்வையும்!!!!