Wednesday, March 31, 2010

நியூட்டன் மூன்றாம் விதி




நீ உன் வீட்டின் ஜன்னல் அடைத்தாய்-
என் வீட்டின் வெளிச்சம் பறி போனது!!!

Sunday, March 21, 2010

சட்டைக்குள் ஒரு உலகம்!!!


'என் சட்டையை ஏன் எப்போதும் அணிகிறாய்' என்றேன்-
'உன்னையே அணிவதைப்போல் இருப்பதால்' என்றாய்!
உடனே உனையே இழுத்து அணிந்துக் கொண்டேன் நான் !!!!

Tuesday, March 9, 2010

காதலும் காமமும்

காமம் நிலைக்க
காதல் கொண்டேன்
காதல் நிலைக்க
காமம் கொண்டேன்!!

Friday, March 5, 2010

பஞ்சுமிட்டாய் நீ எனக்கு...


உன் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும்
உதடுகளை ஈரப்படுத்திக் கொள்கிறேன்-
இனிப்பைத் தின்ற சிறு குழந்தையென.....

Thursday, March 4, 2010

வெண்மனமே!!

செந்நிறமல்ல
என்னைக் கவர்ந்தது
உனது வெண்மனம்!!

Wednesday, March 3, 2010

மனத்தவிப்பு!!!

கைக்குழந்தையின் தவிப்பு
கலப்படமில்லா தாய்ப்பாலுக்காக;
பள்ளிச்சிறுவனின் தவிப்பு
கல்வி துறந்த விளையாட்டுக்காக;
மாணவனின் தவிப்பு
வகுப்பு நடக்கா நாட்களுக்காக;
கணவனின் தவிப்பு
நெடுந்தொடர் வெறுத்த மனைவிக்காக;
மனைவியின் தவிப்பு
கள்ளத்தொடர்பு கொள்ளா கணவனுக்காக;
தந்தையின் தவிப்பு
மதுமாது வெறுத்த பிள்ளைகளுக்காக;
அன்னையின் தவிப்பு
முதுமையில் வெறுக்கா குழந்தைகளுக்காக;
பிள்ளைகளின் தவிப்பு
சண்டை சச்சரவில்லா பெற்றோர்களுக்காக;
காதலனின் தவிப்பு
சந்தேகம் கொள்ளா காதலிக்காக;
நண்பனின் தவிப்பு
ஒளிவு மறைவில்லா நண்பனுக்காக;
படைவீரனின் தவிப்பு
தாய் நாட்டின் ஒற்றுமைக்காக;
மக்களின் தவிப்பு
ஊழல் செய்யா அரசியல்வாதிகளுக்காக;
விவசாயின் தவிப்பு
மும்மாரி பெய்யும் கார்முகிலிற்காக;
கடவுளின் தவிப்பு
இன்னலே இல்லா ஜீவராசிகளுக்காக;
அரசியல்வாதிகளின் தவிப்பு
லஞ்ச ஒழிப்பில்லா சட்டத்திற்காக;
இவையனைத்தும் களைவதே
என் மனத்தவிப்பு!!!

என்னவளே!!!

நெற்றியில் சுருக்கம் பிடிக்கும்;
          சுருக்கத்தின் மத்தியில் சிறுபொட்டு பிடிக்கும்;
கண்ணின் கருவிழி பிடிக்கும்;
          கருவிழி காத்திடும் இமையிரண்டு பிடிக்கும்;
முகத்தில் சிறுமூக்கு பிடிக்கும்;
          மூக்குமேல் மின்னலாய் கல்மூக்குத்தி பிடிக்கும்;
செவ்விதழ் போலிரு உதடுகள் பிடிக்கும்;
          உதட்டின் ஓவியமாய் சிறுவெடிப்பு பிடிக்கும்;
குயில்போல் குரல் பிடிக்கும்;
          குரலின் பேசும் செந்தமிழ் பிடிக்கும்;
சங்குபோல் கழுத்து பிடிக்கும்;
          கழுத்தில் காவியமாய் கருமணி பிடிக்கும்;
இடையைத் தொடுகின்ற கூந்தல் பிடிக்கும்;
          கூந்தலின்று வீசும் நறுமணம் பிடிக்கும்;
சினத்தில் சிவக்கும் கன்னம் பிடிக்கும்;
          கன்னத்தில் விழும் சிறுகுழி பிடிக்கும்;
மென்னிய விரல்கள் பிடிக்கும்;
          விரல்கள் தீண்டுகையில் ரசிக்கப் பிடிக்கும்;
வாழைபோல் கால்கள் பிடிக்கும்;
          கால்களைத் தழுவும் சிறுகொலுசு பிடிக்கும்;
அன்னமதை ஒத்த மெல்லிடை பிடிக்கும்;
          இடையைத் தழுவும் உடைகள் பிடிக்கும்;
நெற்றிமேல் வகிடு பிடிக்கும்;
          வகிடு மறைக்கும் நெற்றிச்சுட்டி பிடிக்கும்;
வளைந்த செவிகள் பிடிக்கும்;
          செவிகள் தாங்கும் ஜிமிக்கி பிடிக்கும்;
முத்துபோல் பற்கள் பிடிக்கும்;
          பற்கள் சிந்தும் சிறுபுன்னகை பிடிக்கும்;
நித்திரையில் கனவு பிடிக்கும்;
          கனவு கலைக்கும் உன்னினைவுகள் பிடிக்கும்;
கோபத்தில் மௌனம் பிடிக்கும்;
          மௌனம் கலைக்கும் புன்சிரிப்பு பிடிக்கும்;
உன்னிழலாய் நானிருந்திட பிடிக்கும்;
          உயிரே உன்னை ரொம்பப் பிடிக்கும்!!!

காகிதக் காதல்!!

கவிதை தீட்ட எண்ணி
வார்த்தைகள் கிடைக்காமல்
வெகுநேரம் அமர்ந்திருந்தேன்
திறந்த பேனாவோடு; உன்னைக்
கண்ட மறுகணத்தில்
காகிதத்தோடு காதல் கொண்டு
கவிதை வரைந்தது (என்)பேனா !!

Monday, March 1, 2010

மனக்கள்ளி!!

முகம் மறைத்து
பொன்னகை களவாடும்
கள்வர்கள் நடுவே
முகத்திரை விலக்கி சிறு
புன்னகை வீசி
என்னைக் களவாடிச்
சென்றாயே!!