Sunday, June 25, 2023

மீண்டு(ம்) வருவேன்!

தினந்தோறும் என்னை புதுப்பித்துக்

கொள்கிறேன் எனக்காக அல்லவே!

நான் எப்போது வீழ்வேன் என்று

ஏங்கிக் கிடக்கும் விஷமிகளுக்காக!

நான் இன்னும் வீழ்ந்திடவில்லை என்று

நம்பிக்கையூட்டும் நலம் விரும்பிகளுக்காக!

வஞ்சத்தாலும் துரோகத்தாலும் சற்று 

இடரித்தான் விழுந்து கிடக்கிறேனே தவிர

மண்ணில் புதையுண்டு விடவில்லை!

தைரியமும் மனதிடமும் உற்சாகமாய்

தலைதூக்கிப் பார்க்கிறது புதுப்பிக்கப்பட்ட 

என் முகத்தை நிழல் பிம்பமாகக் காணும்போது!

மீண்டு வருவேன் உங்கள் எல்லோர் முன்பும்

விருட்சமாக வளர்ந்து மீண்டும் வாழ்ந்திடுவேன்!

Friday, June 23, 2023

நம்பிக்கை Vs துரோகம்

நம்பிக்கை - இனி நடக்கப் போகும் 

அனைத்திற்கும் நெஞ்சுரம் பெருக்கும்!

துரோகம் - இன்று வரை நடந்தவை 

யாவிற்கும் ஆழ்மனதின் வேரைப் பிளக்கும்!

நம்பிக்கை தைரியம் கற்றுத் தரும்!

துரோகம் கண்ணீர் வரவழைக்கும்!

ஆறாத வடுவாக நெஞ்சில் நிலைத்தாலும்

இதயத்தை இரு கூறாக்கும் வேதனையை 

மீண்டும் மீண்டும் அனுபவித்தாலும்

துரோகம் தந்த வலிகள் யாவும்

படிப்பினைகளாய் பதிந்து நிற்கும்!

என்றாவது ஒருநாள் நிலைமை மாறும்

நம் வாழ்வில் இதுவும் கடந்து போகும்

என்ற திண்ணமே நம்பிக்கை அன்றோ!

வாழ்க்கைச் சொர்க்கம்!

விதியென இணைந்து

நம் மனதளவில் மட்டும்

முக்கியமென நினைத்திட்ட

ஒருவருடன் ஒன்றாய்

வாழ்ந்தால் மட்டும்தான் நம் 

வாழ்க்கை அழகாகும் என்றில்லை!

நம்மையும் பூரண

மனதோடு விரும்பி

நமது மன ஓட்டங்களையும்

முழுமையாக புரிந்துகொண்டு

நாமே முக்கியமென்று நினைத்து

நமது ஆசைகள் யாவற்றையும்

நிறைவேற்ற முயற்சிக்கும் 

ஒருத்தர் கூட வாழும்பொழுதே

வாழ்க்கை சொர்க்கம் ஆகிடாதோ!

Thursday, June 22, 2023

சுயமரியாதை Vs அன்பு!

கூடியிருந்தவர்கள் விலகும் போது

சுயமரியாதை வென்றால் அன்பு ஒழியும்!

பிரிந்தவர்கள் மீண்டும் கூடும் போது

அன்பு மேலோங்கினால் சுயமரியாதை தோற்கும்!

சுயமரியாதை நம்மை மட்டும் சார்ந்தது

எந்த உறவையும் அறுக்கத் தயங்காது!

அன்பு நம்மையும் சுற்றத்தையும் சார்ந்தது

இழந்த உறவையும் பிரிந்திட நினைக்காது!

சுயமரியாதை நம்மைத் தனிமைப்படுத்தும்!

அன்பு நம்மை கூட்டத்தோடு இணைக்கும்!

சுயமரியாதையை சற்றே விட்டுக் கொடுத்தால்

அன்பு நம்மை ஆரத்தழுவி அரவணைக்கும்!