Wednesday, November 18, 2020

​என் அம்மாவுக்கு!!

உயிர் வாங்கி

உருவம் கொடுத்து

நிலம் தவழ

விட்டவளுக்கு இதோ

நன்றி மடல்..

கருத்தரித்த நாள்முதல்

பாதம் நோகாமல்

நடை பழகினாய்;

விருப்ப உணவேயெனினும்

எனக்கு ஒவ்வாதென்று

வெறுத்து ஒதுக்கினாய்;

எனை ஊட்டமாக்கவே

தினமும் உண்ணவும்

பருகவும் செய்திட்டாய்;

நாற்பது வாரங்கள்

பதமாய் பாதுகாத்து

உயிர்நோகும் வலிபொறுத்து

எனை ஈன்றேடுத்தாய்;

உன் நெஞ்சுக் கதகதப்பில்

எனை அரவணைத்து

இதயத்துடிப்பில் ரீங்காரமிட்டு

என் அழுகையின்

அர்த்தம் அறிந்து

சீராய்த் தாலாட்டுப்பாடி

பாலூட்டி மகிழ்பவளே;

முதலிரு திங்களும்

உந்தன் மடியிலும்

கூரப்பட்டுத் தூளியிலும்

உறங்கும் எனை

முத்தமிட்டு மகிழ்வாய்;

பகல் வேளையிலும்

உறங்கிக் கிடக்கும்

என்பால் கவனமாய்

கணப்பொழுதும் கண்ணிமைக்காது

நானாய் விழிதிறக்க

ஏங்கித் தவிப்பாய்;

ஒளிமட்டும் உணரும்

என்னிடம் உறவினர்கள்

குரலிட்டு நகைப்பர்;

என்னோடு கொஞ்சு

தமிழ் மழலைப்

பேசி புன்னகைப்பாய்;

குப்புறப்படுக்கவும் தவழவும்

பிஞ்சுவிரல் பிடித்து

நடை பழக்கிவிட்டு

மழலையைத் திருத்தி

ஆசையாய்க் கைதட்டி

உற்சாக மூட்டுவாய்;

உடல் நோவுகொண்டால்

வருந்திக் கண்கலங்குவாய்;

பள்ளிச் செல்லும்

பாலகன் எனக்கு

சத்தோடு சுவையாயும்

உணவு அளித்திடுவாய்;

கண்டிப்போடு பாசமும்

பகிர்ந்தளித்து விளையாட்டு

பிள்ளை எனை

பயிலச் செய்திடுவாய்;

பள்ளிதனில் முதல்

மாணவனாய்த் தேர்வுரும்

எனக்குப் பரிசுதந்து

நெஞ்சணைத்து முத்தமிடுவாய்;

வாலிபனான பின்னும்

நல்லதொரு தோழியாய்ப்

பழகி என்னுள்ள

உணர்வு அறிந்திடுவாய்;

பணியமர்ந்த பின்னும்

பாலகன்போல் பாவித்துஎன்

தேவைகள் யாவையும்

நிவர்த்தி செய்திடுவாய்;

உனைப்போல் எனைக்

கண்ணுங்கருத்துமாய் கவனித்துப்

பாசம் பொழிந்திட

கன்னிகை ஒருத்தியை

மணமுடித்து ஆசிர்வதிப்பாய்;

அழகான புரிதலில்

மருமகளாயினும் மகளென

அன்பாய் பழகிட்டு

எனது விருப்பு

வெறுப்புகளைப் பகிர்ந்திடுவாய்;

கருத்தரித்த நாள்கொண்டு

நீவீர் அடைந்த

பேறுகால நிந்தனைகளை

தைரியமாய் அணுக

ஆறுதல் உரைத்து

உன் கைதேர்ந்த

அனுபவத்தால் செம்மையாய்க்

கவனித்து உபசரிப்பாய்;

எமை ஈன்றெடுத்த

பொழுது கொண்ட

களிப்பைவிட எம்பிள்ளை

பிறந்திட பெருமகிழ்ச்சி

அடைந்திட்டு புன்முறுவலிடுவாய்;

மீண்டும் ஒரு

அரவணைக்கும் அன்னை

அத்தியாயம் தொடங்கிற்று!!

உனக்கான தாய்மை

பீடத்தை உனது

வாழ்நாள் முழுதும்

இன்முகத்தோடு ஏற்றிடுவாய்;

இம்மையில் உனையெம்

அன்னையாய்ப் பெற்றிட

அருந்தவம் செய்தேனோ??

உயிரே உன்னைப் பிடிக்கும்!!!

நெற்றியில் சுருக்கம் பிடிக்கும்;

சுருக்கத்தின் மத்தியில் சிறுபொட்டு பிடிக்கும்;

கண்ணின் கருவிழி பிடிக்கும்;

கருவிழி காத்திடும் இமையிரண்டு பிடிக்கும்;

முகத்தில் சிறுமூக்கு பிடிக்கும்;

மூக்குமேல் மின்னலாய் கல்மூக்குத்தி பிடிக்கும்;

செவ்விதழ் போலிரு உதடுகள் பிடிக்கும்;

உதட்டின் ஓவியமாய் சிறுவெடிப்பு பிடிக்கும்;

குயில்போல் குரல் பிடிக்கும்;

குரலில் கேட்கும் செந்தமிழ் பிடிக்கும்;

சங்குபோல் கழுத்து பிடிக்கும்;

கழுத்தில் காவியமாய் கருமணி பிடிக்கும்;

இடையைத் தொடுகின்ற கூந்தல் பிடிக்கும்;

கூந்தலின்று வீசும் நறுமணம் பிடிக்கும்;

சினத்தில் சிவக்கும் கன்னம் பிடிக்கும்;

கன்னத்தில் விழும் சிறுகுழி பிடிக்கும்;

மென்னிய விரல்கள் பிடிக்கும்;

விரல்கள் தீண்டுகையில் ரசிக்கப் பிடிக்கும்;

வாழைபோல் கால்கள் பிடிக்கும்;

கால்களைத் தழுவும் சிறுகொலுசு பிடிக்கும்;

அன்னமதை ஒத்த மெல்லிடை பிடிக்கும்;

இடையைத் தழுவும் உடைகள் பிடிக்கும்;

நெற்றிமேல் வகிடு பிடிக்கும்;

வகிடு மறைக்கும் நெற்றிச்சுட்டி பிடிக்கும்;

வளைந்த செவிகள் பிடிக்கும்;

செவிகள் தாங்கும் ஜிமிக்கி பிடிக்கும்;

முத்துபோல் பற்கள் பிடிக்கும்;

பற்கள் சிந்தும் சிறுபுன்னகை பிடிக்கும்;

நித்திரையில் கனவு பிடிக்கும்;

கனவு கலைக்கும் உன்னினைவுகள் பிடிக்கும்;

கோபத்தில் மௌனம் பிடிக்கும்;

மௌனம் கலைக்கும் புன்சிரிப்பு பிடிக்கும்;

உன்னிழலாய் நானிருந்திட பிடிக்கும்;

உயிரே உன்னை ரொம்பப் பிடிக்கும்!!!

என்னவளாகின்றவளுக்கு/ என்னவனாகின்றவனுக்கு!!!

விடியலில் உன் விழிகளின்

ஊடாய் வையம் காண ஆசை;

கொஞ்சுதமிழ் பேசுகையில் உன் சொற்களின்

ஊடாய் பற்று உணர்ந்திட ஆசை;

பழகுகையில் உன் அரவணைப்பின்

ஊடாய் தாயன்பு பெற்றிட ஆசை;


பகற்பொழுதில்...

கள்ளமில்லா பிஞ்சுமொழி பேசும்

சிறுபிள்ளை போல் குறிப்பறிந்து

சேவை செய்திட ஆசை;

பருத்தி மெண்கரம் பற்றி

காலம் பார்க்காமல்

வெகுதூரம் நடந்திட ஆசை;

உச்சிக் கதிரவன் வறுத்தெடுக்க

அயர்ந்த உனை என் தோளில்

சாய்த்து இளைபாற்ற ஆசை;

சோர்வுக்கு ஆறுதலாய்

உன் மடியில் தலை

வைத்து உறங்கிட ஆசை;

செல்லப் பெயர் வைத்து


உன் கன்னம் கிள்ளி

பாசமாய்க் கொஞ்சிட ஆசை;

பக்குவமாய்ச் செய்திட்ட விருப்ப

உண்டி ஊட்டிடும் வேளையில்

பிஞ்சுவிரல் கடித்திட ஆசை;

யாருமில்லா பாதையில்

பயணத்தின் ஊடாய் பின்னமர்ந்து

இறுக்கமாய் பற்றிக்கொள்ள ஆசை!!


அந்திப்பொழுதில்...

அழகாய் உடையமர்த்தி

அம்சமாய் அலங்கரித்து

ஆலயம் சென்று வர ஆசை;

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

இறையைப் பிரார்த்திக்க ஆசை;

ஆலயத்தினுள்ளே பிறை நெற்றி

நடுவே சிறுகீற்றாய் செந்தூரம்

இட்டுப் பார்த்திட ஆசை;

கடற்கரையில் பாதம் பதித்து

இணக்கமாய் உன் விரல் பிடித்து

சில்லென காற்று வீசுகையில்

மனம் விட்டு உரையாட ஆசை;

சிறு வெளிச்சமதனின் சாலையோர


உணவு விடுதியில் அருமையான

சிற்றுண்டி சுவைத்திட ஆசை;

சுவைப்பினிடையே சிறுசிறு

துணுக்குச் சொல்லி நகைக்குமுன்

கன்னக்குழி ரசித்திட ஆசை!!


இரவுப்பொழுதில்...

தலை கோய்து, நகம் கிள்ளி

ஆனந்தமாய் அன்பைப் பரிமாற

நிலவு புலரும் நேரமிது;

அயர்ச்சியால் என் மார்பில்

சிரம் வைத்துறங்கும்

உனை தாலாட்டிட ஆசை;

குழந்தை போல் இருவரும்

அன்புமொழி பேசியபின் ஈருடல்

ஓருயிராய் சேர்ந்துறங்க ஆசை;

மெல்லமாய் உறக்கத்திநிடையே

ஒருவரை ஒருவர் அறியாமல்

அழகு முகம் ரசித்திட ஆசை;

படிய வாரிய கார்மேக

கேசம் கலைந்திருக்க

சரிசெய்து முத்தமிட ஆசை;

கனவு தரும் அச்சம் போக்க

நெஞ்சு சூட்டில் இதம் காண


ஏதுமறியா மழலையாய்

எனை கட்டிக்கொள்ள ஆசை!!


நிலவே உனை நீங்காமல்

உயிர் பிரியும் அந்நொடி வரை

உன் அன்புக் கடலில்

மூழ்கித் திளைத்திட ஆசை;

உயிரே உனை நான் உருகி உருகி

காதல் செய்ய ஆசை!!!

​மனிதம்!

புற்றீசல் போல்

பெருகிவிட்ட மனிதகுலத்தில்

பணம் உயர்ந்ததும்

மனம் சிறுத்ததும்

குறும்பதிவாய்

பின்வரும் வரிகளில்.....

போராடிடும் வாழ்வுதனில்

நிம்மதி தேடி

அலைந்திடும் வேளையில்

நேயத்தைத் தொலைத்திட்ட

என் மானுடமே;

பிளவுண்டு கிடக்கும்

உறவுகளில் உள்ளன்பு

வெறுத்து பகட்டாய்

பழகுவதேனோ??

கடமையாய்ச் செய்திடும்


அலுவல் ஊழியங்களுக்கு

ஊதியம் போதாதென்று

லஞ்சம் கொழிப்பதேனோ?

ஆதாயமின்றி அணுவையும்

அசைத்திடா அரசியல்வாதி போல்

முழுமனதுடன் செய்திட்ட

உதவிகளுக்கும் தானங்களுக்கும்

உள்ளுணர்வு மறந்து

விலைப்பட்டியல் அறிவிப்பதேனோ?

அவசர உலகினில்

விபத்து நேரத்தில்

நேசக்கரம் நீட்டிடாமல்

கண்டும் காணாமலும்

பயணிக்கும் ஐந்தறிவு

ஜீவன்போல் மாறிப்போனதேனோ?

பகுத்தறிவின்றி நாம்செய்திட்ட

பாவங்களில் சரிபங்கினை

கடவுளுக்கும் காணிக்கையாய்

படைத்திடும் அற்புதம்

கண்டுபிடித்ததெப்படி?

விதையிலிருந்து முளைத்தெழுந்த

விருட்சத்தை மீண்டும்


விதைக்குள் புதைக்கும்

வித்தை கற்றுக்கொண்டதெங்கே?

இறகுகளின் மென்மையதுபோல்

பெண்ணினம் கொண்டிட்ட

மிருதுவான பாசம்

பணத்திற்காய் தொலைந்ததெங்கே?

விருந்தோம்பலிற்கென உடைமையிழந்து

உயிர்நீத்த மாண்புமிகு

மூத்தோர் வாழ்ந்திட்ட

இப்புவியில் இன்று

மனிதநேயம் மட்டுமின்றி

மனிதநேசத்தையும் நாடு

கடத்தினரோ??

நம்பிக்கை துரோகம்!!

உணர்வுகளால் வேரிட்டு

நினைவுகளால் நிறைத்து

உதடுகளால் உளம் அறுத்தாய்!!

அன்பினால் உறவுகளைப்

பெற நினைத்த என்னை

பொறாமையெனும் தீப்பிழம்பில்

மனம் எரியச் செய்தாய்;

பாசசங்கிலியில் இணைத்து

கூட்டுக்குருவிகளாய் வாழ

நினைத்த எனக்கு


தனிமையே நிம்மதியெனும்

தாரக மந்திரம் போதித்தாய்;

உலகமே அமைதிக்காய்

போராடும் வேளையில்

நான்மட்டும் போர்க்கொடி

உயர்த்துகிறேன் உனக்கெதிராய்;

உன்னுடன் உலகைப்

புதிதாய்க் கண்டு ரசிக்க

நினைத்த எனக்கு

உறவினர்களும் அந்நியமாய்ப்

போகச் செய்திட்டாய்;

உன் துன்பங்களுக்கு

கலங்கிட்ட எனது கண்களை

கபடமென்று சொல்லி

அன்பின் வேரறுத்தாய்;

உயிர் பிரியும் வேளையில்

வாழுங்கலையை ஆழ்மனதில்

விதைத்திட்ட என்மீது

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரகடனப் படுத்தினாய்;

உன் நாவினின்று

உதிரும் சொற்களுங்கூட

நெஞ்சம் கிழித்து

குருதி உறையச்செய்யும்


வல்லமை படைத்திட்டாய்;

உணர்வுகளால் வேறிட்டு

நினைவுகளால் நிறைத்து

உதடுகளால் உளம் அறுத்தாய்!

காதல்!!

அழகு பார்த்து வருவது

பாலின ஈர்ப்பு என்பேன்;

ஆண்மை பார்த்து வருவது

வலிமையின் ஈர்ப்பு என்பேன்;

பணம் பார்த்து வருவது

வறுமையின் கொடுமை என்பேன்;

அதீத செல்வத்தில் வருவது

பேராசையின் நீட்சி என்பேன்;

அனுதாபம் கொண்டு வருவது

இரக்கத்தின் நீட்சி என்பேன்;

ஆறுதல் சொல்ல வருவது

விரக்தியின் முடிவு என்பேன்;

நட்பு பாராட்டி வருவது

நம்பிக்கையின் நீட்சி என்பேன்;

சுற்றம் பார்த்து வருவது

தனிமையின் தகிப்பு என்பேன்;

அன்பின் இணைப்பில்

ஆழமான புரிதலில்

இணக்கமான நெருக்கத்தில்

ஈகையின் இன்பமதனில்

உளம் கொண்டாடும்


ஊடுருவரலில்லா பிணைப்பில்

எந்நேரமும் நினைவுகளோடு

ஏதுமறியா மழலைபோல்

ஐயமின்றி பாசத்துடன்

ஒருநாளும் பிரிவுராமல்

ஓய்ந்திடாத கடிகாரமாய்

உன்பால் நானும்

என்பால் நீயும்

உன்னதமான முறையில்

உணர்வுகள் ஒத்தநிலையே

காதல் என்பேன்!!!

அரசியல்வாதி!!

வறுமையில் பிறப்பினும்

கல்வியில் சிறக்காவிடினும்

வாலிபம் தொட்டவுடன்

கடனுக்காவது பணம்வாங்கி


மனுதாக்கல் செய்து

வாக்குறுதிகளைப் போட்டு

தெளிவான மக்கள்

மனதில் ஆசைகளை

திணித்து ஓட்டுகள் எனும்

மீன்கள் பிடித்து

வெற்றிக்கனி ருசித்தபின்

தொண்டர்களின் பாராட்டலில்

குதூகலமாய் பயணித்து

உற்றார் உறவுகளை

கரையேற்றி; வளர்ந்திடும்

பரம்பரைக்கு அதீத

செல்வம் சேர்க்கும்

ஜோலியில் குற்றங்களின்

தலைநகரமாய் தம்தொகுதியை

உருவாக்கிட முற்பட்டு

சமூக சேவை மறந்து

சட்டத்திற்கெதிராய் ஐந்தாண்டு

நமக்கென உழைத்திட்டு

தம்மிறுதி படுக்கையில்

அரசியலுக்காய் தன்வாழ்வை

அர்பணித்த தியாகியென

மக்களே கொண்டாடிடும்

புனிதர்கள் அல்ல


பூலோக தெய்வப்பிறவிகள்!!

சில நேரங்களில் சில மனிதர்கள்!!

துன்பத்தில் ஆறுதல்;

தொய்வில் உந்துதல்;

களிப்பில் ஊறுதல்;

பயத்தில் தேற்றுதல்

தேடும் மனமதுவே

பணமும் பகட்டும்

பார்த்த மறுநொடியில்

பாசமும் பந்தமும்

பஞ்சாய் பறக்கச்

செய்திட; மனம்

வெதும்பி நிற்கும்

என்னைத் தேற்றுகிறதென்

மனசாட்சி - சில நேரங்களில்

சில மனிதர்கள்!!

கர்மவீரர் காமராஜர்!!!

விருதுநகரில் பிறந்து

தமிழகம் வளர்த்திட்ட

வானுயர்ந்த விருட்சகமே;

பள்ளிப் படிப்பில்லை

யெனினும் குலக்கல்வி

ஒழித்து - மூடிய பள்ளிகள்பல

திறந்து பாலர் பலருக்கு

கல்விக்கண் திறந்த

கருணைக் கல்வியாளரே;

ஏழ்மையை மறக்க

கற்கும் பிள்ளைகளுக்கு

மதிய உணவுத்திட்டம்

தந்தருளிய மாமனிதரே;

பன்னாறு வயதில்

அரசியல் இயக்கம்

பிரேவேசித்த ஆட்சியாளரே;

பன்முறை சிறைசென்றாலும்

சுயமாய்க் கற்று

நாடுயரப் பாடுபட்டப்

பகுத்தறிவுப் பகலவரே;

உன்னாட்சி மலர்ந்திட்ட

ஒன்பது வருடங்களும்

தமிழகம் கண்ட பொற்காலமே;

உன்னவையில் உயிர்பூத்த

தொழிலகங்கள் அணைகள்

செம்மையாய் இன்றும்

உன்னெழில் செப்புகின்றன;

பதவிப் பகட்டில்

பணம்புரட்டும் அரசியல்

முதலைகளின் நடுவே

நேர்மையாய் வாழ்ந்திட்ட

நெட்டான நெறியாளரே;

உன் எளிமையால்

எங்களுள்ளம் கவர்ந்த


மக்கள் தொண்டரே;

உன்னினைவைப் பாராட்டும்

எங்களிளைய சமுதாயம்

சமர்ப்பிக்கும் பிறந்தநாள்

வாழ்த்துக்கள்!!!

வாழை!!

தன்னில் உருவாகும்

யாவற்றையும் தன்னகத்தே

கொண்டிராமல் விதைத்தவனுக்கே

நிறைவாய்த் தந்திடும்

நேர்மையான தியாகி!!

​கொசு!!

புரண்டு நானுறங்கையில்

குருதி ருசித்த

களிப்பில் செவியருகே

ரீங்காரமிடும் இசைத்தோழன்!!

​​தனிமை!!

விரக்தியில் தைரியம்

சொல்லித் தந்தது;

மனவலிமை வளர்த்திட

கற்றுத் தந்தது;

உறவுகளின் உன்னதம்

விளங்கிடச் செய்தது;

வார்த்தைகளின் வீரியம்

புரிந்திட வைத்தது;

புன்னகையின் மேன்மை

உணரச் செய்தது;

மரண விருட்சத்தை

மனதில் விதைத்தது;

தலைக்கனம் கூட்டிடும்

செருக் கொழித்தது;

நட்பின் பின்புலம்

அறிந்திடச் செய்தது;


தனக்கெனத் துணைதேடும்

மானுடத்தில் என்

தனிமை உணர்ந்திட

எவரேனும் உளரோ??

​மௌனம்!!

உன்னதமானவர்களின்

உறுதியான ஆயுதம்!

விரக்தியானவர்களின்

வெறுப்பு எல்லை!

முயற்சியற்றவர்களின்

முழுநேர சுபாவம்!

காதலிப்பவர்களின்

ஆசை மொழி!

விவேகமுள்ளவர்களின்

திறமைக்கு அரண்!

முற்றும் துறந்தவர்களின்

கைதேர்ந்த குணம்!

உணர்ச்சியற்றவர்களின்

உளக் குமுறல்!

வார்த்தைகளின்றி ஓர்

ஆயிரம் மொழியின்

பொருள் உணர்த்திட்டு

அன்பதனின் ஆழம்

விளங்கிடச் செய்து


உறவுகளுக் கிடையே

மனம் நெகிழ

வைத்திடும் அற்புதமான

உணர்வு வெளிப்பாடு!!!

ஐம்பதுக்கு ஐம்பது

அருகருகே வசித்தும்

பதின் பருவத்திலே தான்

அவளும் நானும்

நண்பர்களானோம்;


மாதங்கள் கடந்தன...

பிரிவு கனத்தபொழுதில்

காதல் கொண்டோம்;


நேர்மைக்கு வெகுமதியாய்

பதவி உயர்வோடு

அவளது தந்தையை

அசலூர் போகப்பணித்து


வெளிவந்த அரசாணையால்

நிகழ்வுற்ற இடமாற்றம்

எங்கள் இருவருள்ளும்

இழையோடிய பேரன்பை

கலைத்துப் போட்டது!

சமூக வலைதளங்களும்

கணிப்பொறியும் கைப்பேசியும்

உள்ளங்கையில் உறவாடிடும்

இக்காலம் போலில்லையன்று!


வருடங்கள் கரைந்தன...

பள்ளிப்படிப்பும் நிறைவுற்றது;

பட்டமும் பெற்றாகிவிட்டது;

வருங்கால கனவுகளும்

பணிதேடும் விரயமும்

நமை முன்னாளின்

நினைவுகளை அசைபோட

தடை விதித்திருந்தது!


ஆண்டுகள் உருண்டோடின

குடும்ப உறவுகளின்

சுமைகளைப் பொறுப்போடு


தோள்களில் ஏந்தி

கடும் பாரமாய்!


பின்னாளில் வீட்டருகே

அவளை சந்தித்தபோது

இதயத்தின் ரீங்காரம்

இதழ்களில் மௌனக்

கம்பளம் விரித்து

விழியினூடாய் படபடத்து

நலம் விசாரித்தது!


அகவை கூடினால்

பெண்டிற்கு மட்டும்

அழகும் கூடுமோ

எனும் சிறுவினா

எனக்குள்ளே உதித்து

மறைந்தது;

அன்றெனை விட்டுச்சென்ற

அன்பிற்குரிய காதலியா?

இவளென ஐயமெழுந்தது;

மௌன தேவதைதன்

ஆடையை மெல்ல


களைந்து மொழியானாள்!

நல்லா இருக்கியா? என

ஒருசேர இருவரும்

கேட்டு புன்னகைத்தோம்!


சில்லென்ற காற்று

அவளின் மேலங்கியை

என்மேல் படரவிட்டு

உயிர் உறையச்செய்தது;

இலகுவாய் கைகுலுக்கியதில்

பலவருட இடைவெளியை

மென்னிய ஸ்பரிசம்

தகர்த்தெறிந்தது;

சிலிர்த்து மகிழ்ந்து

சிறகின்றி பறந்த

சில கணங்களில்

ரீங்காரம் ஓலமாய்

மாறியென் செவிகளில்

எதிரொலித்தது அவளின்

மணச்செய்தி கேட்டு!


நிசப்தமானதென் வையம்.....


இனியில்லை அவள்

மனதில் நானென்ற

கனவுகளைக் கழுவிலேற்றிட்டு

வாழ்க்கைப் புதினத்தின்

மறுபக்கத்தை புரட்டிப்

படித்து நகரலானேன்;


மணம் கொணர்ந்தேன்!

குடும்பம் பெருகிற்று

மழலைகள் துளிர்த்து

செழிப்போடு வளர்ந்து

பருவத்தே கல்விபயின்று

மணமுடித்து அயல்நாட்டில்

அவரவர் சுற்றத்துடன்

களித்துக் கொண்டிருக்கையில்

செவ்வனே கடமைமுடிந்து

தனிமையில் துணையிழந்து

அந்தி வேளையில்

சமூக சேவகருடன்

பயணித்து சுமூகமாய்

நாட்களை கடத்தினேன்!


இருபத்தைந்து ஆண்டுகள்

கழிந்து போயிற்று......


பின்னொரு நன்னாளில்

கடைத்தெருவில் -

மேனியோ பொலிவிழந்து

முகமோ இறுக்கமாய்

புன்னகை ரேகையொழிந்து

சிதையுற்ற சிலையாய்

என்னெதிரே வந்தவளைக்

கண்டுமனம் வெதும்பி

மொழியற்றுப் பார்வையால்

மனம் கடத்தினோம்;


ஆழிப்பேரலையில் ஊரே

சிதிலமாகி அடையாளமிழக்குமாம்....

சுற்றத்தார் மணமுடித்த

என்னவனை எதிரிநாட்டு

வீரனொருவன் எல்லையில்

சுட்டுவீழ்த்த பெற்றாருடன்

மகனை கற்பித்து

நல்லதோர் பெண்ணை


மணம்செய்துஅவன் வழிபிறந்த

பிள்ளையை மடிக்கொஞ்சித்

திளைத்த தருணத்திலெனை

மகளாய் நினைத்தயெனை

முதியோர் இல்லமனுப்ப

முடிவெடுத்திருக்கும் தன்னிலை

பற்றி விளம்புகையில்

விழியோரம் கண்ணீர்

வழிந்து கன்னத்தை

உரசி போய்விட்டது!


நாட்கள் நகர்ந்தன

விட்டநட்பை புதுப்பித்திடும்

வயோதிக நண்பர்களாய்...


துணைக்கு யாருமில்லையென்ற

ஏக்க மிருவருக்கும்

உண்டென உணர்ந்த

பின்னும்யார் முதலில்

கேட்பதென தயங்கிநிற்க

சட்டென கைபிடித்து

அவளது உலகமே


இருண்டிருக்க யாதுமொரு

ஒளியாய் எனை

வேண்டினாள்!


என்றும் மறந்திடயியலா

நீங்காமல் மனதிலிருக்கும்

முதல் காதலும்

மனங்கவர்ந்த காதலியும்

மீண்டும் கிடைத்திட

அவளையும் காதலையும்

மனமுவந்து அணைத்துக்கொண்டேன்!


கடந்துபோன நாட்களின்

சுவடுகள் களைத்து

இனிவருங் காலத்தை

இருவரும் தோழர்களாய்

அவரவர் தனிமைக்கு

நிறைவான துணையாய்

உவகையுடன் உளமார

வாழ்ந்து களிப்போம்!!