Wednesday, November 18, 2020

என்னவளாகின்றவளுக்கு/ என்னவனாகின்றவனுக்கு!!!

விடியலில் உன் விழிகளின்

ஊடாய் வையம் காண ஆசை;

கொஞ்சுதமிழ் பேசுகையில் உன் சொற்களின்

ஊடாய் பற்று உணர்ந்திட ஆசை;

பழகுகையில் உன் அரவணைப்பின்

ஊடாய் தாயன்பு பெற்றிட ஆசை;


பகற்பொழுதில்...

கள்ளமில்லா பிஞ்சுமொழி பேசும்

சிறுபிள்ளை போல் குறிப்பறிந்து

சேவை செய்திட ஆசை;

பருத்தி மெண்கரம் பற்றி

காலம் பார்க்காமல்

வெகுதூரம் நடந்திட ஆசை;

உச்சிக் கதிரவன் வறுத்தெடுக்க

அயர்ந்த உனை என் தோளில்

சாய்த்து இளைபாற்ற ஆசை;

சோர்வுக்கு ஆறுதலாய்

உன் மடியில் தலை

வைத்து உறங்கிட ஆசை;

செல்லப் பெயர் வைத்து


உன் கன்னம் கிள்ளி

பாசமாய்க் கொஞ்சிட ஆசை;

பக்குவமாய்ச் செய்திட்ட விருப்ப

உண்டி ஊட்டிடும் வேளையில்

பிஞ்சுவிரல் கடித்திட ஆசை;

யாருமில்லா பாதையில்

பயணத்தின் ஊடாய் பின்னமர்ந்து

இறுக்கமாய் பற்றிக்கொள்ள ஆசை!!


அந்திப்பொழுதில்...

அழகாய் உடையமர்த்தி

அம்சமாய் அலங்கரித்து

ஆலயம் சென்று வர ஆசை;

உனக்காய் நானும்

எனக்காய் நீயும்

இறையைப் பிரார்த்திக்க ஆசை;

ஆலயத்தினுள்ளே பிறை நெற்றி

நடுவே சிறுகீற்றாய் செந்தூரம்

இட்டுப் பார்த்திட ஆசை;

கடற்கரையில் பாதம் பதித்து

இணக்கமாய் உன் விரல் பிடித்து

சில்லென காற்று வீசுகையில்

மனம் விட்டு உரையாட ஆசை;

சிறு வெளிச்சமதனின் சாலையோர


உணவு விடுதியில் அருமையான

சிற்றுண்டி சுவைத்திட ஆசை;

சுவைப்பினிடையே சிறுசிறு

துணுக்குச் சொல்லி நகைக்குமுன்

கன்னக்குழி ரசித்திட ஆசை!!


இரவுப்பொழுதில்...

தலை கோய்து, நகம் கிள்ளி

ஆனந்தமாய் அன்பைப் பரிமாற

நிலவு புலரும் நேரமிது;

அயர்ச்சியால் என் மார்பில்

சிரம் வைத்துறங்கும்

உனை தாலாட்டிட ஆசை;

குழந்தை போல் இருவரும்

அன்புமொழி பேசியபின் ஈருடல்

ஓருயிராய் சேர்ந்துறங்க ஆசை;

மெல்லமாய் உறக்கத்திநிடையே

ஒருவரை ஒருவர் அறியாமல்

அழகு முகம் ரசித்திட ஆசை;

படிய வாரிய கார்மேக

கேசம் கலைந்திருக்க

சரிசெய்து முத்தமிட ஆசை;

கனவு தரும் அச்சம் போக்க

நெஞ்சு சூட்டில் இதம் காண


ஏதுமறியா மழலையாய்

எனை கட்டிக்கொள்ள ஆசை!!


நிலவே உனை நீங்காமல்

உயிர் பிரியும் அந்நொடி வரை

உன் அன்புக் கடலில்

மூழ்கித் திளைத்திட ஆசை;

உயிரே உனை நான் உருகி உருகி

காதல் செய்ய ஆசை!!!

No comments:

Post a Comment