Wednesday, November 18, 2020

ஐம்பதுக்கு ஐம்பது

அருகருகே வசித்தும்

பதின் பருவத்திலே தான்

அவளும் நானும்

நண்பர்களானோம்;


மாதங்கள் கடந்தன...

பிரிவு கனத்தபொழுதில்

காதல் கொண்டோம்;


நேர்மைக்கு வெகுமதியாய்

பதவி உயர்வோடு

அவளது தந்தையை

அசலூர் போகப்பணித்து


வெளிவந்த அரசாணையால்

நிகழ்வுற்ற இடமாற்றம்

எங்கள் இருவருள்ளும்

இழையோடிய பேரன்பை

கலைத்துப் போட்டது!

சமூக வலைதளங்களும்

கணிப்பொறியும் கைப்பேசியும்

உள்ளங்கையில் உறவாடிடும்

இக்காலம் போலில்லையன்று!


வருடங்கள் கரைந்தன...

பள்ளிப்படிப்பும் நிறைவுற்றது;

பட்டமும் பெற்றாகிவிட்டது;

வருங்கால கனவுகளும்

பணிதேடும் விரயமும்

நமை முன்னாளின்

நினைவுகளை அசைபோட

தடை விதித்திருந்தது!


ஆண்டுகள் உருண்டோடின

குடும்ப உறவுகளின்

சுமைகளைப் பொறுப்போடு


தோள்களில் ஏந்தி

கடும் பாரமாய்!


பின்னாளில் வீட்டருகே

அவளை சந்தித்தபோது

இதயத்தின் ரீங்காரம்

இதழ்களில் மௌனக்

கம்பளம் விரித்து

விழியினூடாய் படபடத்து

நலம் விசாரித்தது!


அகவை கூடினால்

பெண்டிற்கு மட்டும்

அழகும் கூடுமோ

எனும் சிறுவினா

எனக்குள்ளே உதித்து

மறைந்தது;

அன்றெனை விட்டுச்சென்ற

அன்பிற்குரிய காதலியா?

இவளென ஐயமெழுந்தது;

மௌன தேவதைதன்

ஆடையை மெல்ல


களைந்து மொழியானாள்!

நல்லா இருக்கியா? என

ஒருசேர இருவரும்

கேட்டு புன்னகைத்தோம்!


சில்லென்ற காற்று

அவளின் மேலங்கியை

என்மேல் படரவிட்டு

உயிர் உறையச்செய்தது;

இலகுவாய் கைகுலுக்கியதில்

பலவருட இடைவெளியை

மென்னிய ஸ்பரிசம்

தகர்த்தெறிந்தது;

சிலிர்த்து மகிழ்ந்து

சிறகின்றி பறந்த

சில கணங்களில்

ரீங்காரம் ஓலமாய்

மாறியென் செவிகளில்

எதிரொலித்தது அவளின்

மணச்செய்தி கேட்டு!


நிசப்தமானதென் வையம்.....


இனியில்லை அவள்

மனதில் நானென்ற

கனவுகளைக் கழுவிலேற்றிட்டு

வாழ்க்கைப் புதினத்தின்

மறுபக்கத்தை புரட்டிப்

படித்து நகரலானேன்;


மணம் கொணர்ந்தேன்!

குடும்பம் பெருகிற்று

மழலைகள் துளிர்த்து

செழிப்போடு வளர்ந்து

பருவத்தே கல்விபயின்று

மணமுடித்து அயல்நாட்டில்

அவரவர் சுற்றத்துடன்

களித்துக் கொண்டிருக்கையில்

செவ்வனே கடமைமுடிந்து

தனிமையில் துணையிழந்து

அந்தி வேளையில்

சமூக சேவகருடன்

பயணித்து சுமூகமாய்

நாட்களை கடத்தினேன்!


இருபத்தைந்து ஆண்டுகள்

கழிந்து போயிற்று......


பின்னொரு நன்னாளில்

கடைத்தெருவில் -

மேனியோ பொலிவிழந்து

முகமோ இறுக்கமாய்

புன்னகை ரேகையொழிந்து

சிதையுற்ற சிலையாய்

என்னெதிரே வந்தவளைக்

கண்டுமனம் வெதும்பி

மொழியற்றுப் பார்வையால்

மனம் கடத்தினோம்;


ஆழிப்பேரலையில் ஊரே

சிதிலமாகி அடையாளமிழக்குமாம்....

சுற்றத்தார் மணமுடித்த

என்னவனை எதிரிநாட்டு

வீரனொருவன் எல்லையில்

சுட்டுவீழ்த்த பெற்றாருடன்

மகனை கற்பித்து

நல்லதோர் பெண்ணை


மணம்செய்துஅவன் வழிபிறந்த

பிள்ளையை மடிக்கொஞ்சித்

திளைத்த தருணத்திலெனை

மகளாய் நினைத்தயெனை

முதியோர் இல்லமனுப்ப

முடிவெடுத்திருக்கும் தன்னிலை

பற்றி விளம்புகையில்

விழியோரம் கண்ணீர்

வழிந்து கன்னத்தை

உரசி போய்விட்டது!


நாட்கள் நகர்ந்தன

விட்டநட்பை புதுப்பித்திடும்

வயோதிக நண்பர்களாய்...


துணைக்கு யாருமில்லையென்ற

ஏக்க மிருவருக்கும்

உண்டென உணர்ந்த

பின்னும்யார் முதலில்

கேட்பதென தயங்கிநிற்க

சட்டென கைபிடித்து

அவளது உலகமே


இருண்டிருக்க யாதுமொரு

ஒளியாய் எனை

வேண்டினாள்!


என்றும் மறந்திடயியலா

நீங்காமல் மனதிலிருக்கும்

முதல் காதலும்

மனங்கவர்ந்த காதலியும்

மீண்டும் கிடைத்திட

அவளையும் காதலையும்

மனமுவந்து அணைத்துக்கொண்டேன்!


கடந்துபோன நாட்களின்

சுவடுகள் களைத்து

இனிவருங் காலத்தை

இருவரும் தோழர்களாய்

அவரவர் தனிமைக்கு

நிறைவான துணையாய்

உவகையுடன் உளமார

வாழ்ந்து களிப்போம்!!

No comments:

Post a Comment