Wednesday, November 18, 2020

​என் அம்மாவுக்கு!!

உயிர் வாங்கி

உருவம் கொடுத்து

நிலம் தவழ

விட்டவளுக்கு இதோ

நன்றி மடல்..

கருத்தரித்த நாள்முதல்

பாதம் நோகாமல்

நடை பழகினாய்;

விருப்ப உணவேயெனினும்

எனக்கு ஒவ்வாதென்று

வெறுத்து ஒதுக்கினாய்;

எனை ஊட்டமாக்கவே

தினமும் உண்ணவும்

பருகவும் செய்திட்டாய்;

நாற்பது வாரங்கள்

பதமாய் பாதுகாத்து

உயிர்நோகும் வலிபொறுத்து

எனை ஈன்றேடுத்தாய்;

உன் நெஞ்சுக் கதகதப்பில்

எனை அரவணைத்து

இதயத்துடிப்பில் ரீங்காரமிட்டு

என் அழுகையின்

அர்த்தம் அறிந்து

சீராய்த் தாலாட்டுப்பாடி

பாலூட்டி மகிழ்பவளே;

முதலிரு திங்களும்

உந்தன் மடியிலும்

கூரப்பட்டுத் தூளியிலும்

உறங்கும் எனை

முத்தமிட்டு மகிழ்வாய்;

பகல் வேளையிலும்

உறங்கிக் கிடக்கும்

என்பால் கவனமாய்

கணப்பொழுதும் கண்ணிமைக்காது

நானாய் விழிதிறக்க

ஏங்கித் தவிப்பாய்;

ஒளிமட்டும் உணரும்

என்னிடம் உறவினர்கள்

குரலிட்டு நகைப்பர்;

என்னோடு கொஞ்சு

தமிழ் மழலைப்

பேசி புன்னகைப்பாய்;

குப்புறப்படுக்கவும் தவழவும்

பிஞ்சுவிரல் பிடித்து

நடை பழக்கிவிட்டு

மழலையைத் திருத்தி

ஆசையாய்க் கைதட்டி

உற்சாக மூட்டுவாய்;

உடல் நோவுகொண்டால்

வருந்திக் கண்கலங்குவாய்;

பள்ளிச் செல்லும்

பாலகன் எனக்கு

சத்தோடு சுவையாயும்

உணவு அளித்திடுவாய்;

கண்டிப்போடு பாசமும்

பகிர்ந்தளித்து விளையாட்டு

பிள்ளை எனை

பயிலச் செய்திடுவாய்;

பள்ளிதனில் முதல்

மாணவனாய்த் தேர்வுரும்

எனக்குப் பரிசுதந்து

நெஞ்சணைத்து முத்தமிடுவாய்;

வாலிபனான பின்னும்

நல்லதொரு தோழியாய்ப்

பழகி என்னுள்ள

உணர்வு அறிந்திடுவாய்;

பணியமர்ந்த பின்னும்

பாலகன்போல் பாவித்துஎன்

தேவைகள் யாவையும்

நிவர்த்தி செய்திடுவாய்;

உனைப்போல் எனைக்

கண்ணுங்கருத்துமாய் கவனித்துப்

பாசம் பொழிந்திட

கன்னிகை ஒருத்தியை

மணமுடித்து ஆசிர்வதிப்பாய்;

அழகான புரிதலில்

மருமகளாயினும் மகளென

அன்பாய் பழகிட்டு

எனது விருப்பு

வெறுப்புகளைப் பகிர்ந்திடுவாய்;

கருத்தரித்த நாள்கொண்டு

நீவீர் அடைந்த

பேறுகால நிந்தனைகளை

தைரியமாய் அணுக

ஆறுதல் உரைத்து

உன் கைதேர்ந்த

அனுபவத்தால் செம்மையாய்க்

கவனித்து உபசரிப்பாய்;

எமை ஈன்றெடுத்த

பொழுது கொண்ட

களிப்பைவிட எம்பிள்ளை

பிறந்திட பெருமகிழ்ச்சி

அடைந்திட்டு புன்முறுவலிடுவாய்;

மீண்டும் ஒரு

அரவணைக்கும் அன்னை

அத்தியாயம் தொடங்கிற்று!!

உனக்கான தாய்மை

பீடத்தை உனது

வாழ்நாள் முழுதும்

இன்முகத்தோடு ஏற்றிடுவாய்;

இம்மையில் உனையெம்

அன்னையாய்ப் பெற்றிட

அருந்தவம் செய்தேனோ??

No comments:

Post a Comment