புற்றீசல் போல்
பெருகிவிட்ட மனிதகுலத்தில்
பணம் உயர்ந்ததும்
மனம் சிறுத்ததும்
குறும்பதிவாய்
பின்வரும் வரிகளில்.....
போராடிடும் வாழ்வுதனில்
நிம்மதி தேடி
அலைந்திடும் வேளையில்
நேயத்தைத் தொலைத்திட்ட
என் மானுடமே;
பிளவுண்டு கிடக்கும்
உறவுகளில் உள்ளன்பு
வெறுத்து பகட்டாய்
பழகுவதேனோ??
கடமையாய்ச் செய்திடும்
அலுவல் ஊழியங்களுக்கு
ஊதியம் போதாதென்று
லஞ்சம் கொழிப்பதேனோ?
ஆதாயமின்றி அணுவையும்
அசைத்திடா அரசியல்வாதி போல்
முழுமனதுடன் செய்திட்ட
உதவிகளுக்கும் தானங்களுக்கும்
உள்ளுணர்வு மறந்து
விலைப்பட்டியல் அறிவிப்பதேனோ?
அவசர உலகினில்
விபத்து நேரத்தில்
நேசக்கரம் நீட்டிடாமல்
கண்டும் காணாமலும்
பயணிக்கும் ஐந்தறிவு
ஜீவன்போல் மாறிப்போனதேனோ?
பகுத்தறிவின்றி நாம்செய்திட்ட
பாவங்களில் சரிபங்கினை
கடவுளுக்கும் காணிக்கையாய்
படைத்திடும் அற்புதம்
கண்டுபிடித்ததெப்படி?
விதையிலிருந்து முளைத்தெழுந்த
விருட்சத்தை மீண்டும்
விதைக்குள் புதைக்கும்
வித்தை கற்றுக்கொண்டதெங்கே?
இறகுகளின் மென்மையதுபோல்
பெண்ணினம் கொண்டிட்ட
மிருதுவான பாசம்
பணத்திற்காய் தொலைந்ததெங்கே?
விருந்தோம்பலிற்கென உடைமையிழந்து
உயிர்நீத்த மாண்புமிகு
மூத்தோர் வாழ்ந்திட்ட
இப்புவியில் இன்று
மனிதநேயம் மட்டுமின்றி
மனிதநேசத்தையும் நாடு
கடத்தினரோ??
No comments:
Post a Comment