Tuesday, December 7, 2010

தாஜ்மஹால்


இது கல்லறை அல்ல-
உண்மை காதலின் கருவறை!
வெண்ணிலவின் ஒளியில்
அமைதியாய் இந்த பளிங்கு நிலவு!
பூவுக்குள் தூங்கும் தேன் துளியாய்
இங்கு நிசப்தமாய் தூங்கும் காதலின் சப்தங்கள்!
சொற்களில் வெளிபடுத்த முடியா காதலின் உயரம்
கற்களாய் உயர்ந்து நிற்கிறது!
இங்கு சென்றால்
மெதுவாய் சுவாசியுங்கள்-
தூங்கும் மும்தாஜ் விழித்துவிட போகிறாள்!
இதய துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு கேளுங்கள்-
காதல் மொழி கண்டிப்பாய்ப் புரியும்!!!!

Wednesday, December 1, 2010

முதல் காதல்!!!

மழையினது வானவில்லாய்

குளக்கரையில் நீர்க்குமிழியாய்

எத்தருணம் நினைப்பினும்

எவரிடத்துச் சொன்னாலும்

கன நாழிகையில்

துயரத்திலும் ஒய்யாரமாய்;

இருவிழியில் நீரோட்டமாய்

ஜனனித்து மரிக்கிறதென்

முதல் காதல்!!!




பி.கு. முதல் காதல் என்றாலே ஒரு தனிச்சிறப்பு இருக்கத்தானேச் செய்கின்றது


Thursday, November 25, 2010

இதய வெற்றிலை


என் இதய வெற்றிலையின்
ஓரத்தில் சுண்ணாம்பாய்
உனை தடவினேன்...
என் இதயம் முழுவதும்
சிவந்தது....காதலால்!!!

Tuesday, November 23, 2010

மனச்சலவை!!!

கடற்கரையில் 
மேடுகளாய் மணற்வீடுகள் ;
குழிகளாய் பல்லாயிரம்
மனிதகுலப் பாதச்சுவடுகள்;

சுழன்றடிக்கும் காற்றதனால்
படிந்திருக்கும்  மணற்பரப்புகள் -
நிலைத்திருக்கும் நேரமதோ
ஓர் இரவுதான்!!
அப்படியிருக்க நம்
மனக்கரையில் (மட்டும்)
தோரணங்களாய் புகழ்ச்சிகள்;
கரைச்சுவடுகளாய்
அன்றாட நிகழ்வுகள்;
உறவுகள் தரும் 
துன்பமதையும் நீக்கமற
நிலைபெறச் செய்து
வாழ்வியலை மாற்றிக்
கொள்வதேனோ???

தினம் தினம் நிகழும்
ஆனந்தத் தருணங்களால்
நம் மனக்கரைகளை
துடைத்தெறிவோமே!!

- ஜே கே

Monday, November 22, 2010

வேண்டுகோள்!!

அவளின் கண்முன்னே
வைப்பதென்றால்
அவன் சிற்பமாகக்கூட நிற்பான்!!
அவளின் கண்படாமல்
போவதென்றால்
அவன் சவமாய்ப் போவான்!!
அவளின் மென்விரல்கள்
தீண்டுவதென்றால்
அவள் பூக்களாய்ப் பூப்பான்!!
அவளின் விரல்படாமல்
போகுமென்றால்
அவள் மாக்களாய் மாறிப் போவான்!!
அவளின் பட்டுமேனி
தழுவுமேன்றால்
அவன் நூலிழையாய் மாறுவான்!!
அவளின் நினைவினின்று
விலகிப்போனால்
அவன் சந்தனமாய் இழைந்து தேய்வான்!!
ஆகவே அவன்
அவனாயிருக்க அவளைக்
காதலிக்கச் சொல்லுங்கள்!!!

Friday, October 29, 2010

பெண்ணோவியம்!!!

கருவறையில் விருட்சமாய்
உருப்பெறச் செய்து
நிலவினும் அழகிய
வெண்முகம் கொடுத்து
நிலவுலகில் தேவதையாய்
பவனிவரும் அவன்
தீட்டிய ஓவியத்தைக்
கண்டு கொள்ளத்
தான் பூக்குவியலாய்
மழைத்தூவும் வேளையில்
மின்னொளி வீசுகிறானோ
என் தேவன்!!!

- ஜே கே

கானம் :  மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே...

Tuesday, September 28, 2010

கனவு!!!

இமையிரண்டு 
விலகிய தும்நம்
நினைவுப் பெட்டகத்தைக்
கடத்திச் செல்லும்
சாகசக்காரி!!!

பி.கு. நம்மை ஏமாற்றுபவர்களின்
பட்டியலில் கனவும் 
ஓர் இடம் பிடிக்கிறது!!!

Tuesday, September 14, 2010

காதல் பக்கங்கள்!!!


என் புத்தகத்தின் பக்கங்கள் இனிக்கிறது..
நாவை தொட்டு
நீ திருப்பியதால்!

Monday, August 30, 2010

கண்ணுக்குள் நீ!


என் கண்ணின் கரைகளிலே
தவம் கிடந்தாய்...
கண்ணை மூடியவுடன்
கனவுகளாய் கண்ணை நிறைத்தாய்!

Thursday, August 26, 2010

சொல்லா காதல்


பத்து மாதம் தாண்டியும்

பிறவா குழந்தையாய்....

மென்று தின்று சுவை தீர்ந்த பின்பும்

மீண்டும் மீண்டும் மெல்ல தோன்றுவதாய்-இந்த

சொல்லா காதல்..

சொன்ன சில காதல் கூட

காமம் கரை ஏறி முடிந்து வடிந்து போகக்கூடும்.. இது

சொல்லா காதல்..

ஒவ்வொரு திருமணத்தின்

நாதசுரதுக்கு இடையே ஈனசுரமாய்!!!

இது செல்லா காதல் இல்லை

இதற்கு நல்ல முடிவுகளும் இல்லை!

என்றும் முடிவும் இல்லை!

Wednesday, July 21, 2010

கனவுத்தோழி!!!

இருவரும் தனிமையில்...

கருவிழிதனில் பிம்பம்
பரிமாறவில்லை;
கன்னம் கிள்ளிப்
பார்த்ததில்லை;
மூச்சுக் காற்று
புணர்ந்ததில்லை;
இதழில் முத்தங்கள்
பகிர்ந்ததில்லை;
மென் ஸ்பரிசம்
தீண்டியதில்லை;
தோள் சாய்ந்
துறங்கவில்லை;
கார்மேகக் கூந்தல்
கோதியதில்லை;
கடற் கரையில்
சந்தித்ததில்லை;
மடியில் தலைவைத்
துறங்க வில்லை;
விரல் பிடித்து
நடந்ததில்லை;
ரகசியமாய்
உரையாடிய தில்லை;
நிழல்கள் கூட
உரசியதில்லை;

கனவுகளால் அலங்கரித்து
நினைவுகளாய் நுழைந்து
நீ மட்டும்
என்னுள் உயிராய்க்
கரைந்த தெப்படி??

- ஜே கே

குறிப்பு : இருவரும் தனிமையில்...
எனும் தொடரை அனைத்து வரிகளின் முதன்மையாய் சேர்த்து படிக்கவும்!!!

சொப்பனம்!!!

நிஜங்களின் நகல்படமாய்
 நெஞ்சதனின் கற்பனையாய்
இன்பத்தின் இனிமையாய்
 துன்பத்தின் கொப்பளிப்பாய்
நினைவுகளின் கதம்பமாய்
 நிசப்தமான இரவுதனில்
நிம்மதியாய் நாமுறங்கும்
 வேளையில்; முட்களும்
பூக்களும் கலந்த
 அழகிய பூச்சரமாய்க்
கண்முன்னே நிகழ்வுகளாய்க்
 கோர்த்துக் காட்டும்
மாயக் கண்ணாடி!!!

Wednesday, July 7, 2010

தமிழ் எங்கள் செம்மொழி!!!

தரணியில் பிறக்கும்
பச்சிளங் குழந்தைகளின்
நாவினின்று கொஞ்சுதமிழாய்
சிந்தும் முதலொலி - 'த'னா;
தொல்மொழியான தமிழின்
முதலெழுத்து!!

தமிழ் - தம்மொழியென விளக்கம்
கூறும் இனிய மொழி;
வேறெந்த மொழியிளுமில்லா
'ழ'கரம் பேசும்;
முக்காலம் உணர்த்த
வினைத்தொகைக் கூறும்;
இருபொருள் கொடுக்கும்
ஓர் வார்த்தையாய்
சிலேடை பாடும்;

சிறுபிள்ளைக்கு
உயிரெழுத்துக்களின் அணிவகுப்பாய்
ஒழுக்கநெறி கற்றுத்தந்த
ஆத்திசூடி விளம்பும்;
உறவுகளின் உன்னதமுணர்த்த
ராமாயணமும்;
அறம் பொருள்
இன்பம் வீடுபேறு எனும்
நால்வகை நோக்கமுணர்த்த
மகாபாரதமும்; தன்னகத்தே
இரு இதிகாசங்களாய் உள்ளடக்கும்;

இல்லறத்தை நல்லறமாக்கச்
சிலப்பதிகாரம் சொல்லும்;
இரண்டடியில் வாழ்வியல்
உரைத்த வள்ளுவனின்
திருக்குறள் நம்
அறமோழியின் செம்மைபாடும்;
பாரெங்கும் தொன்மையைப்
பேணிக்காக்க சங்கம்
பலகண்ட தேசியமொழி;
ஆளுமையைச் செப்ப
தமிழ்நாட்டின் ஆட்சிமொழி
ஆனதெங்கள் பிள்ளைமொழி;

கண்டங்கள் தாண்டிச்
சீரோங்கி நிற்கும்
நாடுகளில் எம்தமிழர்
போற்றும் பேச்சுமொழி;
நம் தாய்மொழியாம்
தமிழுக்கு புகழாரம்
சூடும் செம்மொழி
மாநாடு வாழியவே!!!


பிரசுரம் செய்யப்பட்ட பதிவஞ்சல் : http://youthful.vikatan.com/youth/Nyouth/lakshmananpoem190610.asp

Sunday, June 27, 2010

பிரிவு


கோபத்தில் தவறுகளை எண்ணும் மனது-
பிரிவுகளில் மட்டும் பாசத்தை வளர்கிறது...

மறத்தல்...மனங்களின் மரணம்
மன்னித்தல்....பிரிவுகளின் மரணம் என தெரிந்திருந்தும்
மறு முனையின் பதிலுக்காகவே காத்திருக்கும்...

பிரிவுகளின் ஏக்கத்தில்
கிழிந்தே இருக்கும் நான்..

Saturday, June 26, 2010

ரயில் பயணங்களில் -2


பச்சையாய், சிகப்பாய், நீலமாய், இருளாக
மாறி கொண்டேயிருக்கும் பின்னணி..

புகை வண்டியின் சதுர ஜன்னல்கள்...புகைப்பட சட்டமாய்...
ஒளிமிளிர் ஓவியமாய் நீ...

நீ கன்னத்தில் கை வைத்து அமர்ந்தாய்
என் உள்ளக் கப்பல் கவிழிந்தே போனது .....

Dedicated to the beautiful girl sat next to me in kovai express on 25Jun10,D10,seat no.79.

Tuesday, June 15, 2010

நினைவுச் சுவடுகள்...

பிரிந்து விட்ட போதும்
கடற்மணலில் புதைந்த
காலடித் தடங்களாய்
அவளின் நினைவுகள்
என் மனக்கரையில் !!!

Sunday, April 18, 2010

ரயில் பயணங்களில் !!!


பின்னோக்கிச் செல்லும்
மரங்களுக்கு இடையே
அலைந்து அலைந்து ஓவியம் வரைகிறது
அவளின் ஒற்றை முடி !!!!

Monday, April 5, 2010

மறுபிறவி!!!


மறுபிறவியில்
நம்பிக்கை இல்லையெனக்கு -
என் துணைவி
பிரசவிப்பதைப்
பார்க்கும் வரை!!!
(கணவர்கள் கோணத்திலிருந்து)

காதல்!!!


இரு இதயங்கள்
தீட்ட நினைப்பதனை
நான்விழிகள் தீட்டும்
மொழி வடிவமில்லா
ஓவியம் - காதல்!!!

Wednesday, March 31, 2010

நியூட்டன் மூன்றாம் விதி




நீ உன் வீட்டின் ஜன்னல் அடைத்தாய்-
என் வீட்டின் வெளிச்சம் பறி போனது!!!

Sunday, March 21, 2010

சட்டைக்குள் ஒரு உலகம்!!!


'என் சட்டையை ஏன் எப்போதும் அணிகிறாய்' என்றேன்-
'உன்னையே அணிவதைப்போல் இருப்பதால்' என்றாய்!
உடனே உனையே இழுத்து அணிந்துக் கொண்டேன் நான் !!!!

Tuesday, March 9, 2010

காதலும் காமமும்

காமம் நிலைக்க
காதல் கொண்டேன்
காதல் நிலைக்க
காமம் கொண்டேன்!!

Friday, March 5, 2010

பஞ்சுமிட்டாய் நீ எனக்கு...


உன் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும்
உதடுகளை ஈரப்படுத்திக் கொள்கிறேன்-
இனிப்பைத் தின்ற சிறு குழந்தையென.....

Thursday, March 4, 2010

வெண்மனமே!!

செந்நிறமல்ல
என்னைக் கவர்ந்தது
உனது வெண்மனம்!!

Wednesday, March 3, 2010

மனத்தவிப்பு!!!

கைக்குழந்தையின் தவிப்பு
கலப்படமில்லா தாய்ப்பாலுக்காக;
பள்ளிச்சிறுவனின் தவிப்பு
கல்வி துறந்த விளையாட்டுக்காக;
மாணவனின் தவிப்பு
வகுப்பு நடக்கா நாட்களுக்காக;
கணவனின் தவிப்பு
நெடுந்தொடர் வெறுத்த மனைவிக்காக;
மனைவியின் தவிப்பு
கள்ளத்தொடர்பு கொள்ளா கணவனுக்காக;
தந்தையின் தவிப்பு
மதுமாது வெறுத்த பிள்ளைகளுக்காக;
அன்னையின் தவிப்பு
முதுமையில் வெறுக்கா குழந்தைகளுக்காக;
பிள்ளைகளின் தவிப்பு
சண்டை சச்சரவில்லா பெற்றோர்களுக்காக;
காதலனின் தவிப்பு
சந்தேகம் கொள்ளா காதலிக்காக;
நண்பனின் தவிப்பு
ஒளிவு மறைவில்லா நண்பனுக்காக;
படைவீரனின் தவிப்பு
தாய் நாட்டின் ஒற்றுமைக்காக;
மக்களின் தவிப்பு
ஊழல் செய்யா அரசியல்வாதிகளுக்காக;
விவசாயின் தவிப்பு
மும்மாரி பெய்யும் கார்முகிலிற்காக;
கடவுளின் தவிப்பு
இன்னலே இல்லா ஜீவராசிகளுக்காக;
அரசியல்வாதிகளின் தவிப்பு
லஞ்ச ஒழிப்பில்லா சட்டத்திற்காக;
இவையனைத்தும் களைவதே
என் மனத்தவிப்பு!!!

என்னவளே!!!

நெற்றியில் சுருக்கம் பிடிக்கும்;
          சுருக்கத்தின் மத்தியில் சிறுபொட்டு பிடிக்கும்;
கண்ணின் கருவிழி பிடிக்கும்;
          கருவிழி காத்திடும் இமையிரண்டு பிடிக்கும்;
முகத்தில் சிறுமூக்கு பிடிக்கும்;
          மூக்குமேல் மின்னலாய் கல்மூக்குத்தி பிடிக்கும்;
செவ்விதழ் போலிரு உதடுகள் பிடிக்கும்;
          உதட்டின் ஓவியமாய் சிறுவெடிப்பு பிடிக்கும்;
குயில்போல் குரல் பிடிக்கும்;
          குரலின் பேசும் செந்தமிழ் பிடிக்கும்;
சங்குபோல் கழுத்து பிடிக்கும்;
          கழுத்தில் காவியமாய் கருமணி பிடிக்கும்;
இடையைத் தொடுகின்ற கூந்தல் பிடிக்கும்;
          கூந்தலின்று வீசும் நறுமணம் பிடிக்கும்;
சினத்தில் சிவக்கும் கன்னம் பிடிக்கும்;
          கன்னத்தில் விழும் சிறுகுழி பிடிக்கும்;
மென்னிய விரல்கள் பிடிக்கும்;
          விரல்கள் தீண்டுகையில் ரசிக்கப் பிடிக்கும்;
வாழைபோல் கால்கள் பிடிக்கும்;
          கால்களைத் தழுவும் சிறுகொலுசு பிடிக்கும்;
அன்னமதை ஒத்த மெல்லிடை பிடிக்கும்;
          இடையைத் தழுவும் உடைகள் பிடிக்கும்;
நெற்றிமேல் வகிடு பிடிக்கும்;
          வகிடு மறைக்கும் நெற்றிச்சுட்டி பிடிக்கும்;
வளைந்த செவிகள் பிடிக்கும்;
          செவிகள் தாங்கும் ஜிமிக்கி பிடிக்கும்;
முத்துபோல் பற்கள் பிடிக்கும்;
          பற்கள் சிந்தும் சிறுபுன்னகை பிடிக்கும்;
நித்திரையில் கனவு பிடிக்கும்;
          கனவு கலைக்கும் உன்னினைவுகள் பிடிக்கும்;
கோபத்தில் மௌனம் பிடிக்கும்;
          மௌனம் கலைக்கும் புன்சிரிப்பு பிடிக்கும்;
உன்னிழலாய் நானிருந்திட பிடிக்கும்;
          உயிரே உன்னை ரொம்பப் பிடிக்கும்!!!

காகிதக் காதல்!!

கவிதை தீட்ட எண்ணி
வார்த்தைகள் கிடைக்காமல்
வெகுநேரம் அமர்ந்திருந்தேன்
திறந்த பேனாவோடு; உன்னைக்
கண்ட மறுகணத்தில்
காகிதத்தோடு காதல் கொண்டு
கவிதை வரைந்தது (என்)பேனா !!

Monday, March 1, 2010

மனக்கள்ளி!!

முகம் மறைத்து
பொன்னகை களவாடும்
கள்வர்கள் நடுவே
முகத்திரை விலக்கி சிறு
புன்னகை வீசி
என்னைக் களவாடிச்
சென்றாயே!!

Friday, February 26, 2010

வேதியல் மாற்றம்


உன் காதலைச் சொல்லிவிட்டு
என் உதட்டில் இருந்து நீ முத்தங்களைத் திருடிச் சென்ற
நொடி பொழுதில் எறும்புகள் மொய்க்கும்
கற்கண்டு சிலை ஆகி போனேன் நான் !!

விண்ணை தாண்டி வருவாயா


காதலே கண் முன்னே கவிதையாக!
கவிதையே கண் முன்னே காதலாக !!!!

Wednesday, February 24, 2010

நிஜ வருத்தம்!!

அவள்மீது
கோபமென்றால் ஏன்
எங்களை தரையிறங்கி
ஊர்வலம் போகச்
சொல்கிறாய் - (நான்
உடைத்தெறிந்த) கதவுத்
தாழ்பாள்கள்!!

காதல் கண்ணாமூச்சி!!

விழிகள் மோதிடாக் காதல்; 
விழிகள் கலந்துறவாடுங் காதல்; 
தேகம் தீண்டாக் காதல்; 
இருளில் நிறம் மாறுங் காதல்; 
காமம் தேடுங் காதல்; 
நிழல்கள்மட்டு முரசுங் காதல்; 
முகங்கண்டு மலர்ந்த காதல்; 
சினங்கொண்டு பிரிந்த காதல்; 
ஊனம் மறந்த காதல்; 
அகங்கண்டு மலர்ந்த காதல்; 
புன்னகயிலூற் றெடுத்த காதல்; 
நட்புதடம் பெயர்ந்த காதல்; 
நட்பால் முறிந்த காதல்; 
உறவுகள் சேர்த்(ந்)த காதல்; 
உறவு கள்தட மாறிய காதல்; 
கல்லறை யில்புதை யுண்ட காதல்; 
சில்லறை யால்சிதை யுண்ட காதல்; 
மதஇனவேறு பாடில்லா காதல்; 
மனங்களுக்காய் மதமாறிய காதல்; 
பாலினவேறு பாடில்லா காதல்; 
பெற்றோரின் பாசமறந்த காதல்; 
பாசமிகுதியால் சந்தேகமுற்ற காதல்; 
அனுபவமில்லா பள்ளிக் காதல்; 
அனுபவமுற்ற மூத்த காதல்; 
பல்லுருவாய் காதல் ஒளிந்திருக்க 
என்னுடன் மட்டுங் 
கண்ணாமூச்சி ஆடுவதேனோ!!

Monday, February 22, 2010

கண்ணாடிக் குட்டிகள்!


நீ என் வீட்டிற்கு வரும் போதெல்லாம்
முகம் பார்க்கும் கண்ணாடியை தரையில் தவற விடுவேன்-
உன் ஒரு பிம்பம் போதாது எனக்கு-
தரை முழுதும் வண்ண கோலமாய் நீ !

என் அம்மா!!!



என் கவிதைக்கெல்லாம் முதல் ரசிகை!
கசக்கி எறிந்த காகிதங்களை எல்லாம் சேர்த்து வைத்தவள்!

இன்றோ என் கவிதைகள் எல்லாம் பத்திரமாக...
ஆனால் நீ மட்டும் ஏனோ காற்றோடு கற்பூரமானாய்......

Saturday, February 20, 2010

நீ கவிதை!!


உன்னை பற்றி கவிதை சொல்கிறேனே
நீ என்னை பற்றி கவிதை சொல்லேன் என்றேன் ஒரு நாள்!
மறு நாள் வந்து மனனம் செய்த
தபுசங்கர் கவிதையை தடுமாறி தடுமாறி ஒப்பித்தாய்-
நீ என் கண் முன்னே குழந்தை ஆனாய்!!!
மனதினுள்ளே கவிதை ஆனாய்!!!!

குறுக்கீடு


உன்னுடைய குறுஞ்செய்திக்காகவும்
அழைப்புக்காகவும் காத்திருக்கும் போதெல்லாம்
ஏமாற்றவே வருகிறது
அலைபேசியின் வர்த்தக அழைப்புகள் !!!

மன சிலந்தி


தேர்ந்த கைத்தறிக் கலைஞனின்
வீட்டைக் கலைப்பதாய்த் தோன்றும்
ஒவ்வொரு சிலந்தி வலையை
அழித்திடும் போதும் !!!!!

Friday, February 19, 2010

விக்கலில் சிக்கிய கவிதை


முன்னொரு நாளில் நாம் சேர்ந்து உண்ணும் பொழுது
விக்கியபடியே சொன்னாய்-'யாரோ நினைக்குறாங்க'
அப்படியானால் நீ காலம் முழுதும்
விக்கியயபடியே இருந்திருக்க வேண்டுமே-
என்னால்!!!

Thursday, February 18, 2010

தழும்பு..


இன்றுவரையென் அத்துணை
விண்ணப்பத்திற்கும் அங்க
அடையாள மானதென்
நண்பன் பள்ளிப்பருவத்தில்
உண்டாக்கிய நெற்றிக்காயம்!!

சிந்தனை செய்!!!


மனித அறிவினின்று
சற்றே விலகி சிந்திக்கும்
ஜீவனுக்கு பெயர்கள் இரண்டு -
ஒன்று விஞ்ஞானி
மற்றொன்று பைத்தியக்காரன் :(

Tuesday, February 16, 2010

ஏக்கம்!!


குடைபிடிக்க
யாருமில்லையென்று
கண்ணீர் சிந்துகின்றன
மழையால் நனைந்த
இலைகளும் பூக்களும்!!!

Saturday, February 13, 2010

பிப் 14

இதயத்தின் நாளங்களில் எல்லாம் புது ரத்தம் பாயும்
மூளைக்குள் மின்மினி பூச்சிகள் கூடு கட்டும்
கிறுக்கல்கள் கூட கவிதையாய் மாறும்
அதிசயம் காதலில் மட்டுமே நிகழும் !!!!!!

Thursday, February 11, 2010

நெருங்கிய நண்பன்..

நாம் பகைத்துக்
கொள்ள முடியாநம்
அந்தரங்கம் அறிந்த
ஒரே எதிரி - நண்பன்!!!

Friday, February 5, 2010

இருள் மனங்கள்!!!

மாரி பொழியவே
கரு மேகங்கள் தான்
ஒன்றுகூட வேண்டியிருக்கிறது -
என் மனித மனத்தில் தான்
கருமையை வெறுக்கும்
எத்தனை நிறங்கள்!!!!

நிலவே பெண்ணாய்!!!

நிலவின் காலூன்றி
நிற்கவே முடியவில்லையாம் - ஆனால்
நிலவிற்கே சேலை கட்டி
அழகு பார்க்கும்
வரம் வாங்கி வந்திருக்கிறாள்
என்னவளின் தாய்!!!!

நவீன யூதாஸ்!!!

என்னவளின் கைவளையும்
கால்கொலுசும் யூதாஸ்களாயின -
அவள் வருவதை என்னிடம்
காட்டிக்கொடுத்தபோது!!!

கொம்புத்தேன்!!

எட்டாக் கனியென
அறிந்தும் கொய்ய
முயலும் முடவர்களானர் -
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
என் இளைய சமுதாயம்!!!

நிலாப்பெண்ணே !!!

என்னவளும் என்னிடம்
கோபம் கொள்கிறாள்
அவளை விடுத்து
நிலவின் அழகை
பாடுகிறேனென்று -
எப்படி உணர்த்துவேன்
அவள் தான்
என் முழுநிலவென்று!!!!

Wednesday, February 3, 2010

இனி ஒரு விதி செய்வோம்...

இனி
யுத்தங்கள் வேண்டாம்...
முத்தங்கள் செய்வோம்!!!

Tuesday, February 2, 2010

ஓர் இரவு

உயிர் ஒன்று தனக்காய்
உருகும் ஓசைக் கூட அறியாமல்
உணர்வுகளுக்கே உணர்வில்லாமல்
உறங்குகிறாள் ஒருத்தி....எங்கோ!!!

Wednesday, January 27, 2010

கண்ணாடி உள்ளம்!!

உடைந்தே போகும் என தெரிந்தும்
உனையே நாடும் என் உள்ளம்-
உருகிப் போவோம் என தெரிந்தும்
ஒளி விடும் மெழுகைப் போல !!!

கலைந்தே இருந்தாலும்
என் மனதை கலைக்கிறதே
உன் கூந்தல்!!!

Thursday, January 21, 2010

நிழலின் சினம்!!!

என் நிழலும்
என்னிடம்
கோபம் கொள்கிறது
என்னை முந்தி
உன் நிழலை பின்தொடர
முடியவில்லையென்று!!!

உன் நினைவுகள்!!

இழுத்து இழுத்து போர்த்தினாலும்
சின்ன இடம் தேடி கடிக்கும் கொசுவை போல
கடித்திடும் உன் நினைவுகள் !!!

திருநங்கை = ஆண் -> ( ஆண் / 2 + பெண் / 2 )

பெண்ணே பெண்ணாய் வாழ
கடினப்படும் இப்பூவுலகில்-ஒரு
ஆணே பெண்ணாய் வாழ
முற்படுகிறானே - திருநங்கை(கள்)!!!

Wednesday, January 20, 2010

புரியாக்காதல்!!!

நான் என்னை
தந்த போது நீ
வாங்கவில்லை- நீ
உன்னைத் தர
வந்தபோது நான்
என்னிடமில்லையே!!!

Wednesday, January 13, 2010

தைப்பொங்கல்!!!

உழவனின் உழைப்பு - போற்றப்படும்
தமிழ் மறவனின் வீரம் - புகழப்படும்
சூரியனுக்கு நன்றி - உரைக்கப்படும்
தமிழனது புதுவருடம் - பிறக்கும்
கைகுத்தல் அரிசி புடையப்பட்டு
குயவனின் கைவண்ணத்தால் ஆன
வண்ணமிகு மண்பானையில் நம்
தமிழ் பண்பாடும்
தமிழனின் உள்ளமும்
தைமகள் பொங்கலென
பொங்கி வருவாள்!!!

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Thursday, January 7, 2010

பொது நலம்!!

சுயநலக்காரனிடத்தும்
பொது நலத்தைக்
கண்டேன்
பேருந்து படிக்கட்டிலும்
மதுக்கடையிலும்!!!

Wednesday, January 6, 2010

'காக்கும் கரங்கள்'

தள்ளாடும் வயதில் காத்திடும் கரங்களாய் இருந்திடாப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூத்த குழந்தைகள் தஞ்சம் போகும் சரணாலயம் 'காக்கும் கரங்கள்' முதியோர் இல்லம் :( :(

Tuesday, January 5, 2010

பருத்தி கன்னம்!!!

நுண் பருத்தியின்
மென்மையை உணர
விரும்பியபோது
என்னவளின் கன்னத்தை தான்
தொட்டு பார்த்தேன்!!!

Monday, January 4, 2010

என்னவளே!!!

கைக்குழந்தையின் மென் விரல்களால்
தன ஸ்பரிசம் தீண்ட
விரும்பும் தாயினைப்போல்
என்னவளின் விரல் தீண்ட
காத்துக்கொண்டிருக்கிறேன்
ரொம்ப காலமாய் !!!